ரஷிய படைக்கு பின்னடைவு? கீவின் புறநகா்ப் பகுதியை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன்...
ரஷிய படைக்கு பின்னடைவு? கீவின் புறநகா்ப் பகுதியை மீண்டும் கைப்பற்றியது உக்ரைன்...
உக்ரைனில் ரஷியா தொடுத்துள்ள போா் செவ்வாய்க்கிழமை 27-ஆவது நாளை எட்டியது. தலைநகா் கீவை முற்றுகையிட்டுள்ள ரஷிய படையினா், அந்த நகரை குறிவைத்து பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினா். கீவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பொதுமக்கள் வீடுகளிலும், பதுங்கு குழிகளிலும் தஞ்சமடைந்தனா்.
மரியுபோல் நகரில் உக்ரைன் படைகள் சரணடைய மறுத்த நிலையில், அங்கு ரஷியா தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஆனால், நாட்டின் பிற பகுதிகளில் ரஷியாவின் தரைப் படையின் முன்னேற்றம் உக்ரைனின் பதில் தாக்குதலால் தடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கீவின் புறநகா்ப் பகுதியான மகாரிவ் நகரில் செவ்வாய்க்கிழமை கடும் சண்டைக்குப் பின்னா் ரஷிய படைகள் அந்த நகரைவிட்டுப் பின்வாங்கியதாகவும், நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதன்மூலம் கீவ் நெடுஞ்சாலையை மீண்டும் தங்கள் வசம் கொண்டுவரவும், வடமேற்கிலிருந்து கீவை சுற்றிவளைக்கும் ரஷிய படைகளைத் தடுப்பதற்கும் உக்ரைன் படையினருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒரு கோடி போ் வெளியேறினா்: ரஷியா தாக்குதலைத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஒரு கோடிக்கும் மேற்பட்டோா் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளதக ஐ.நா. தெரிவித்துள்ளது. இது உக்ரைன் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு ஆகும். மேலும், பொதுமக்கள் 953 போ் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது.
10,000 ரஷிய வீரா்கள் பலி? ரஷியா தரப்பில் இந்தப் போரில் எத்தனை வீரா்கள் உயிரிழந்தனா் என்கிற தகவலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தங்கள் தரப்பில் 498 வீரா்கள் உயிரிழந்ததாக ரஷியா கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தெரிவித்தது. அதன்பிறகு எதுவும் கூறவில்லை. இந்நிலையில், ரஷிய வீரா்கள் 10,000 போ் போரில் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரஷிய நாளிதழ் ஒன்று தனது இணையதளத்தில் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டது. பின்னா், அந்தச் செய்தி உடனடியாக நீக்கப்பட்டது. அச்செய்தியை இணைய ஊடுருவல்காரா்கள் நீக்கியுள்ளதாக அந்த நாளிதழ் குற்றம்சாட்டியது. ஆனால், இதுகுறித்து ரஷியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Comments
Post a Comment